வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – ஜெயமோகன்Must-Read
வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – ஜெயமோகன்

படிமச்செரிவும் (poetic images), பொருட்செறிவும் குன்றாத நடையில் இயற்றப்பட்டுள்ள வெண்முரசு, மகாபாரதத்தின் மறுசித்தரிப்பு அல்ல, இது ஒரு நவீன நாவல், என அழுத்தமாகக் கூறுகிறார், இதன் ஆசிரியர் ஜெயமோகன்.

தினமும் ஒரு அத்தியாயம் எனத் தொடர்ந்து பத்து ஆண்டுகள், மகாபாரதத்துக்கு தனது நாவலில் நவீன வடிவம் கொடுக்கப் பெரும் வேட்கையுடன், கடந்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றிவரும் ஜெயமோகன், உலக இலக்கிய வரலாற்றிலேயே மிகப்பெரிய நாவலாக இது அமைய வேண்டும் என்ற இலக்கை (தனக்கு) நிர்ணயித்துள்ளார்.

இன்றைய இலக்கியப்போக்கிற்குரிய அழகும் வடிவமும் கொண்டுள்ளது வெண்முரசு. நமது வழக்கில் இருக்கின்ற எளிமையான (பேச்சு வழக்கிலுள்ள தமிழ்) நடையில் இருந்து விலகி தற்காலத்தில் சற்று அன்னியமாக தெரிகின்ற இலக்கியத்தமிழ் நடையில் இயற்றப்பட்டிருந்தாலும் ஒன்றிரண்டு பாகங்களைக் கடந்தபின்னால், நடையின் வீரியம் நம்மை ஊடுருவி பிணைந்து விடுகிறது. நமது பண்டைக்கால வரலாறு என்பதையும் கடந்து தத்துவச்செறிவும் மெய்ஞானச்செறிவும் வெண்முரசில் முதன்மை பெறுவதைக் கண்கூடாக உணரலாம்.

வெண்முரசின் முதல் பாகம் “முதற்கனல்”. தனது மடியில் அமர்ந்துள்ள நாகர்குலப் புதல்வன் அஸ்திகனுக்கு அவன் அன்னை காலமும் வெளியும் உருவான கதையை ஒரு குளிர்கால இரவில் விவரிப்பதாகத் தொடங்குகிறது கதை. உயிர்ப்பான ஆதி பிம்பங்கள் நமது மனத்திரையில் பறந்து விரியச்செய்கின்றது ஆசிரியரின் இலக்கியச்செறிவு மிக்க மொழி நடை.

அன்னையின் மூலம் சொற்களால் மட்டுமே உலகை இதுவரை உணர்ந்திருந்த ஆஸ்திகன் மேல் ஒரு மிகமுக்கியப் பொறுப்பு சுமத்தப்பட்டு அஸ்தினாபுரத்தில் நடைபெறவுள்ள சர்பசத்திர வேள்விக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கே மன்னன் ஜனமேஜெயனையும் வியாசரையும் சந்திப்பதில் தொடங்கிக் கதை விரிவடைகிறது.

தொடக்கத்தில் பீஷ்மரையும் சத்தியவதியையும் சுற்றிக் கதை சுழலும்போது அவர்களின் பாத்திர சித்தரிப்புகள் நம்மை பிரமிப்படைய செய்யத் தவறுவதில்லை. இவர்களிருவரை விட முதற்கனலின் வெம்மை அதிகமாகக் குவிந்திருப்பது விசித்திரவீரியன், அம்பா சகோதிரிகள் மற்றும் சிகண்டியின் மேல். சிறு நெருப்புப்பொறி மிகப்பிரம்மாண்டமான காட்டுத்தீயாக மாறிக் காட்டின் வளங்களனைத்தையும் நுகர்ந்திடுவதைப் போல, இம்மூவர் கூட்டணி நமது பிரக்ஞையின் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் நுழைந்து அவற்றை சிலிர்ப்படையச் செய்கின்றது.

+ + +

 1. கடந்து சென்ற சொற்றொடரை மீண்டும் நிதானித்து வாசிக்கும் போது நமது மனதில் புதிய புதிய வாயில்களை திறக்கும் திறன் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், மண்ணில் புதைந்த வைரங்களாகக் கொட்டிக்கிடக்கின்றன. என்னை கவர்ந்த ஒரு சில உதாரணங்கள் இங்கே:

  “தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது. “

  “காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்”

  “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது”

  “இந்த அறியாச் சுழல்பாதையில் மீண்டும் மீண்டும் நான் உன்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். நம்மை வைத்து ஆடுபவர்களுக்கு சலிக்கும்வரை இதை நாம் ஆடியே ஆகவேண்டும்”

  “அவன் மிரண்ட காட்டுக் குதிரைமேல் ஏறமுயல்பவன் போல அந்தச் சொல்லில் ஏற முயன்றான் “அது நீயே!” “

 1. தமிழ் மொழியின் செழுமையை உணர இது ஒரு அற்புதமான நூல். “பாய்கலை ஏறிய பாவை” என அம்பையைப் பார்த்து சால்வனின் நண்பன் வர்ணிக்கும் அந்தச் சொற்றொடரின் அர்த்தம் காண நாம் முற்படும்போது நமது மொழிவளம் கூடுகிறது. நாவல்களைப் பரபரவென படித்துப்பழகிய நமக்குச்  சில வேளைகளில் இதுபோன்ற நடை அயர்ச்சியைத் தரும் என்றாலும், நூலைப் படிக்கத் தொடங்குவதற்கு முன் இதை முழுமையாக உணர்ந்துகொண்டால் அள்ள அள்ளக் குறையாத அமுதமாக இனிக்கும் என்பதில் ஐயமில்லை.
 2. எடுத்துக்கொண்ட பாத்திரத்தை உளவியல் ரீதியாக அணுஅணுவாகப் பிரித்து அவர்களின் குணங்களைப் பிசகில்லாமல் வெளிப்படுத்துவதில் இந்த நூல், மணிமகுடத்தில் வைத்த வைரமாக ஜொலிக்கிறது.
 3. மகாபாரதம் என்பது வெல்பவர்களின் புகழ் பாடும் காவியம் என்பதை மாற்றி, விதுரனின் அன்னையான சூதர் குலப்பெண் சிவையின் கோணத்திலும், சந்தனுவின் சகோதரன் பால்ஹிகனின் கோணத்திலும், புத்தகத்தின் பார்வை விரிந்து அவர்களின் உலகை அறிமுகப்படுத்துவது, நமக்குப் புதிய புரிதலை உண்டாக்குகிறது.
 4. கற்கும் வித்தையின் மேல் முழுமையான ஆளுமை பெற முனிவர் அக்னிவேசர், துரோணர், சிகண்டி உட்பட பிற மாணவர்கள் பெறவேண்டிய மனநிலை பற்றி அவரது குருகுலசாலையில் வகுக்கும் விதிகள் அற்புதமான உளவியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

  “சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது”

வெண்முரசு – அள்ளக் குறையாத அமுதம்!


Book Details:

Title வெண்முரசு - நூல் ஒன்று
Discovery Book Palace Paperback
Online eBook
Editor(s)/Author(s)/Illustrator(s)/Translator(s) Jeyamohan (ஜெயமோகன்)
Publisher Natrinai (நற்றிணை)

About Ravindran V

தன்னைத் தானே செதுக்கி சுயமாக அடையாளம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு self-made மனிதனாக என்னைப் பார்க்கிறேன். கடவுள் இது போன்ற தவறை எப்போதும் செய்வதில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *