தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல – S.விஜயன் 4Worth a read

நமக்குப் பார்ப்பதற்கு நிலையாகத் தெரியும் தீபத்தில் பற்றியெரியும் சுடரானது பற்றவைத்த வினாடி முதல், ஒவ்வொரு கணமும் மறைவதும் புதியதாய் உருப்பெருவதுமாய் செயல்படுகிறது. தீபச்சுடர் நிலையான ஒருசுடர் அல்ல, மாறாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் கோடிக்கணக்கான சுடர்கள். இந்தக் கணப்பொழுதில் தோன்றும் சுடர் அடுத்த கணத்தில் தோன்றப்போகும் சுடரை தோற்றுவித்து மறைகிறது. அடுத்தகணம் தோன்றப்போகும் சுடர், அதனையடுத்த சுடரைத் தோற்றுவித்து மறையும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களும் இந்தத் தொடர் மாறுதலுக்குட்பட்டே இங்கே வாசம் செய்கின்றன.

-புத்தர்

Devarahasiyam - Cover

Photo Courtesy of Lion-Muthu Comics

காமிக்ஸ் என்றால் நம்மில் பலருக்கு சட்டென்று மனதினுள் தோன்றுவது ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்ற டின்டின் (TINTIN), ஆஸ்டெரிக்ஸ் (ASTERIX) மற்றும் டிஸ்னி (DISNEY). காமிக்ஸ் என்பது சிறு பிள்ளைகள் சமாசாரம் என்பதையும் தாண்டி இதில் பல்வேறு அழுத்தமான சங்கதிகள் அடங்கியுள்ளன என்பதை அறிந்தவர்கள் சிலரே. ஒரு கிராபிக் நாவலாக வடிவம் எடுக்கும் ஒரு காமிக்ஸ் இதழின் வீரியம் ஒரு ஹாலிவூட் படத்தையும் விஞ்சும் என்பது உண்மை. சமீபத்தில் “லயன் காமிக்ஸ்” எனும் காமிக்ஸ் மாத இதழில் வெளியிடப்பட்ட “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் கதை இதற்கான சரியான சான்று.

வெற்றி பெறும் ஒவ்வொரு கதைக்கும் எப்போதும் தொடக்கம் நம்மைக் கட்டிப்போடுவதாக அமைய வேண்டும். மெல்லிய தென்றல் வருடிச்செல்லும் ரம்மியமான இரவு தொடங்கும் வேளையில் வியர்க்க விருவிருக்க ஒரு புத்தத் துறவி கதையின் தொடக்கத்தில் ஓடி வரும்போது, நீரைக் கண்ட தாகம் போல நமது முழு கவனத்தையும் தனதாக்கிக்கொள்கிறது புத்தகம்.

Devarahasiyam

Photo Courtesy of Lion-Muthu Comics

திபெத்தை ஆக்கிரமித்து, அதன் மத அடையாளங்களை முற்றிலும் அழிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்த சீனராணுவப்படைப்பிரிவு கம்யுனிச பழமைவாத கேப்டன் டோங்யு தலைமையில் புத்த மடாலயத்தை சூழ்ந்து, கண்ணில்படுவோரைக் கொன்று குவித்து, அனைத்தையும் தீயிட்டு அழிக்கும் அறிமுகக் காட்சிகளுடன் கதை தொடங்குகிறது. புராதன ரகசியங்களை ஆராய்வதற்காக மடாலயம் வந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஈகோன் பாயெர் இங்கே நமக்கு அறிமுகமாகிறார்.

நடுங்கவைக்கும் உயரத்தில் படபடப்பான மனநிலையில் இருக்கும் வாசகர்களை ஒரு பஞ்சி (bungee) கயிற்றை காலில் கட்டி உயரத்தில் இருந்து திடீரென தள்ளிவிட்டதைப் போல, சட்டென்று காட்சிகள் மாறி, பரபரப்பான காட்சிகள் அரங்கேறும், உலகின் கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுடின் ஸ்டுடியோவுக்குள் நம்மை கொண்டு சேர்க்கிறது அடுத்த காட்சி. இங்கே ஸ்டண்ட்மேன் டெட் கானெர்ட்டன், மற்றும் இயக்குனர் பாயெர் (ஈகோன் பாயெரின் தம்பி) நமக்கு அறிமுகமாகிறார்கள். டெட்டுக்கும் பாயெரின்அண்ணன் மகள் ஹெலனுக்கும் இடையே இருந்துவந்த நீண்டகால நட்பு காதலாக மாறும் தருணம். இங்கிருந்து மீண்டும் திபெத்துக்குத் தாவும் கதை, புத்த மடாலயத்தில் பேராசிரியரின் ஆராய்ச்சி முடிவுகளைக் கைப்பற்ற, சீன அரசாங்கம் அனுப்பும் இளம் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியி. தனியார் துப்பறிவாளர் மாக்ப்ரைட்டையும், அவரது யாருக்கும்-அஞ்சாத “TAKE IT EASY ” குணத்தையும், ஒரு சுவாரஷ்யமான சூழ்நிலையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர்.

Devarahasiyam

Photo Courtesy of Lion-Muthu Comics

முக்கிய பாத்திரங்களின் அறிமுகத்தை அடுத்து கதை அபரிமிதமான வேகத்தில் பயணிக்கிறது. தந்தையைக் கண்டுபிடிக்க திபெத் பயணம் மேற்கொள்ள, தனது சித்தப்பாவின் அனுமதியை பெற்றுவிடுகிறாள் ஹெலன். ஹெலனின் நண்பன் டெட் அன்-அமெரிக்கன் ஆக்டிவிடீஸ் கமிட்டியின் மேல் தனக்குள்ள பற்றுதலால், ஹெலனின் பயணத்தை தடுக்க முயல, அவனயும் அவன் காதலையும் தூக்கியெறிகிறாள் ஹெலன். துப்பறிவாளர் மாக்ப்ரைடை, சித்தப்பா பாயெர் ஹெலனுடன் பாதுகாப்புக்காக அனுப்புகிறார். திபெத்தில் அவர்கள் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியியுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சிலுவையில் அறையப்பட்ட ஏசு, அதில் இருந்து உயிர் பிழைத்து தனது ரகசிய ஆதரவாளர்களுடன் திபெத் வழியாக காஸ்மீர் வந்தடைந்தார் மற்றும் அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார் எனும் குறிப்புகளை பண்டைய ஆவணங்கள் மூலம் அறிந்துகொண்ட பேராசிரியர் ஈகோன் பாயெர், சீன ராணுவத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, சில புத்தத் துறவிகளின் உதவியுடன் வேறொரு மடாலயத்தை அடைகிறார். ஸ்ரீநகரில் உள்ள “யூஸ் ஆசாபின்” கல்லறை உண்மையில் ஏசு கிறிஸ்துவின் கல்லறை என்பதையும் திபெத்திய தேடலில் கண்டுபிடிக்கிறார். இந்த புத்தகத்தின் கதைக்கு இது முதுகெலும்பாக அமைகிறது.

ஏசுவின் வாழ்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை பல்வேறு கிராமிய, நகரப் புராணக்கதைகளில் பல நுற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றது. ஸ்ரீநகரில் முஸ்லிம் மத துறவிகளின் கட்டுப்பாட்டில் உள்ள “யூஸ் ஆசாப்” எனும் துறவியின் ரோசா பால் கல்லறை அஹம்மத்திய முஸ்லிம்களால் ஏசுவின் கல்லறை என்று இன்றும் நம்பப்படுகிறது. மேலும் ஏசுவின் பணிரெண்டாம் வயது முதல் முப்பது வயதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் எனும் பதில் கிடைக்காத கேள்விக்கு, அவர் இந்தியாவிலும் திபெத்திலும் தங்கியிருந்து புத்த மத கோட்பாடுகளை கற்று ஞானம் பெற்றார் எனவும் இப்புராணக் கதைகள் பதில் சொல்வதுண்டு. இந்த புராணக்கதைகளின் நம்பிக்கைகளை அற்புதமாக தனது கதைக்கு பயன்படுத்தி அதனைசுற்றி நிகழ்வுகளை சுவாரஸ்யமாக கோர்க்கிறார் கதாசிரியர்.

புத்தகத்தின் கதாசிரியர் ராபெர்டோ டெல் ப்ரோ (Roberto Dal Pra’) , ஓவியர் பாவ்லோ க்ரெல்லா (Paolo Grella). பிரெஞ்சில் “Le Manuscript Interdit” எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தக் கதை மூன்று பாகங்களாக வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் “The Forbidden Manuscript” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, இப்போது லயன் காமிக்ஸ் சார்பாக அதன் எடிட்டர் திரு.விஜயன் அவர்களால், ஒரே பாகமாக “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் பெயரில் அழகுற தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .

+ + +

 1. கதாசிரியரின் அற்புதமான எடிட்டிங் திறனை புத்தகத்தின் பல கட்டங்களில் காணமுடியும். எந்தவொரு ஜெர்க்கும் இல்லாமல் காட்சிகளும் சூழல்களும் மாறுகின்றன. இந்த மாறுதல்களுக்கிடையே வாசகர்களின் கவனத்தைத் தொடர்ந்து புத்தகம் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்கிறது.
 2. டா-வின்சி-கோட் சாயலில் சுவாரஸ்யமான கதைக்களம். பல வரலாற்றுக்குறிப்புகளும் அவை நிகழும் இடங்களும், நிஜத்தினை அல்லது நம்பிகையினை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.
 3. கதை புத்தகத்தின் ஒரு கண் என்றால், அசாத்தியமான சித்திரங்கள் புத்தகத்தின் மறு கண்ணாக அமைகின்றன. மென்மையான /கடினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்களாகட்டும், இயற்கை அன்னையின் மடியில் தவழும் மலை முகடுகளாகட்டும், அல்லது வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த லாஸ் ஏஞ்செல்ஸ் வீதிகளாகட்டும், ஓவியர் பாவ்லோ க்ரெல்லா அசரடிக்கும் திறமையுடன் ஒரு ஓவிய விருந்து படைத்திருக்கிறார்.
 4. அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு.
 5. ஏஜென்ட் ஜாங் ஜியுவும், மாக்ப்ரைட்டும் கதையின் இறுதியில் மங்கலான ஒளியில் உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் போது “ஏசு கிறிஸ்துவுக்கு துரோகமிழைத்த போது ஜூடாஸ் தந்த முத்தத்தின் மீது எனது சிந்தனை லயித்திருந்தது” என மாக்ப்ரைட் சொல்ல, ஒரு ரொமாண்டிக் மூடுக்கு வரும் ஜாங் ஜியுவிற்கு, சட்டென்று அதன் அர்த்தம் புரியும்போது, அங்கே ஏற்படும் ட்விஸ்ட் ஒரு சினிமாவில் இடம்பெற்றிருந்தால் நிறைய கைதட்டலை பெற்றிருக்கும்.

– – –

 1. கதையை இன்னமும் கொஞ்சம் தத்துவார்த்தமாக நகர்த்தியிருக்கலாம். அதற்கான வாயப்புகள் ஏராளமாக இருந்தும் கதாசிரியர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. புத்தகத்தில் சினிமாக்களுக்கே உரிய ஒரு கமர்சியல் நெடி அடிக்கிறது.

காமிக்ஸ் அறிமுகமில்லாத புத்தக ஆர்வலர்களுக்கு, இந்தப் புத்தகம் அந்த அற்புத மாயா உலகத்தின் திறவுகோலாக அமைந்து அவர்களின் எண்ணங்களை வண்ணமயமாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை.

நினைவுகளிலிருந்து நீங்க மறுக்கும் நிறைவான புத்தகம்!


Book Details:

Title தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல
Lioncomics at Worldmart Paperback
Editor(s)/Author(s)/Illustrator(s)/Translator(s) Vijayan S. (S.விஜயன்)
Publisher Prakash Publications

About Ravindran V

தன்னைத் தானே செதுக்கி சுயமாக அடையாளம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு self-made மனிதனாக என்னைப் பார்க்கிறேன். கடவுள் இது போன்ற தவறை எப்போதும் செய்வதில்லை.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல – S.விஜயன்

 • M.Chakravarthy

  Good review,Ravi.
  Appreciate your time & efforts in sharing this detailed review.
  Your review would certainly an interest in non-comic readers too.

  You have not shared on “others & takeaways” – Any thoughts on these ?

  As commented earlier, please try to share your reviews’ with the author’s & get their views ,if possible .

  Keep doing the good work & waiting for more reviews from you…

 • OO

  இளம் பிராயத்து நினைவுகளை கிளறி விட்டது இந்தப்பதிவு. இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி போன்றோரும், விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள் போன்ற தலைப்புகளும் நினைவுக்கு வந்தன. எங்கள் சித்தப்பா வாங்கி வந்த பிரதியை யார் முதலில் படிப்பது என்று எங்களுக்கு நடுவில் எப்போதும் அடிதடி நடக்கும்.
  முத்து காமிக்ஸ் என்று அந்நாளில் பிரபலமான மாத இதழ் தற்போதும் லயன் காமிக்ஸ் என்ற பெயரில் வருகிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

 • Ravindran V Post author

  Thanks for your feedback chaks! Currently non-comics readers don’t have a high opinion about comics. If this review serves as an eyeopener for them, that would be great. Will definitely think about your suggestion chaks. Thanks!

 • Ravindran V Post author

  @Uncle00,
  முதல்ல டிராப்ட் கரெக்ட் பண்ண உங்க அட்வைஸ் ரொம்ப உதவிய இருந்துச்சு. நன்றிகள் பல!
  நீங்க காமிக்ஸ் பத்தி ஷேர் பண்ண உங்க அனுபவம் ரொம்ப சந்தோசத்த கொடுத்துச்சு. //விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள் // CID லாரன்ஸ் ஜூடோ டேவிட் சாகசம். 🙂 . அட்டகாசமான VINTAGE கதைகள்.

  //முத்து காமிக்ஸ் என்று அந்நாளில் பிரபலமான மாத இதழ் தற்போதும் லயன் காமிக்ஸ் என்ற பெயரில் வருகிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.//
  முத்து காமிக்ஸ் எடிட்டர் திரு.சௌந்தரபாண்டியன். அவரோட மகன் தற்போதைய எடிட்டர் திரு.விஜயன். இப்போ லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் PARALLEL ல PUBLISH பண்றாங்க. மேலும் தகவல்களுக்கு LION-MUTHUCOMICS.BLOGSPOT.IN